ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை!

சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜாவுக்கு அளிக்கப்பட்ட ரன் அவுட் தீர்ப்பு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அம்பயர் நீண்ட நேரம் கழித்து, மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ரீப்ளே வந்த பின், தீர்ப்பை மாற்றியதை கண்டு கேப்டன் கோலி கோபத்தில் கொந்தளித்தார்.

ஜடேஜா அவுட் தான் என்றாலும், அம்பயர் முறைப்படி தீர்ப்பு வழங்கவில்லை. விதிப்படி அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை என்பதே சரி என பலரும் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது.

சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. 7வது ஓவரிலேயே ராகுல் 6 ரன்கள் எடுத்தும், கேப்டன் கோலி 4 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்தியா 25 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஸ்ரேயாஸ் ஐயர் தன் 5வது ஒருநாள் போட்டி அரைசதம் கடந்து அசத்தினார். நீண்ட நாட்களாக மோசமான பேட்டிங்கால் விமர்சனத்தை சந்தித்து வந்த பண்ட் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.