'கொரோனா'வை அரசியலாக்குவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனா சார்பு நிலையில் உள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதனோம், இது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் என்று தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “உலக சுகாதார நிறுவனத்திடம் ஆரம்பத்திலேயே அதிகமான தகவல்கள் இருந்தன. ஆனால் அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். அவர்களது பல விஷயங்கள் தவறாக இருந்தன. தொற்று பரவிய ஆரம்ப காலத்தில், சீனாவுக்கு எல்லையை திறந்து வைக்க அறிவுறுத்தினர். அதிர்ஷ்டவசமாக நான் அதை நிராகரித்தேன். அவர்களுக்கான நிதியை நிறுத்தி வைப்பது குறித்து சிந்திப்போம்.” என கூறினார்.


அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோவும், நேற்று (ஏப்.,8) "அமைப்புகள் முறையாக செயல்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்துவரும் நிதியுதவி மறுபரிசீலனை செய்யப்படுகிறது" என டிரம்பின் கருத்தையே பிரதிபலித்தார்.



இது குறித்து நேரடியாக பதிலளித்துள்ள உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம், “அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் தங்கள் மக்களை காப்பாற்றுவதில் தான் இருக்க வேண்டும். தயவுசெய்து கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். அதிக உயிரிழப்புகள் வேண்டும் என்றால், இதனை செய்யுங்கள். அப்படி இல்லை என்றால், அரசியலாக்குவதை தவிருங்கள். கொரோனாவிலிருந்து அரசியலை தனிமைப்படுத்துங்கள். ஆபத்தான இவ்வைரஸை வீழ்த்த ஒற்றுமை மிக முக்கியம். உங்களை நிரூபிக்க வேறு பல விஷயங்கள் இருக்கும் போது, கொரோனாவை வைத்து அரசியல் செய்வது, நெருப்புடன் விளையாடுவது போன்றது.” என எச்சரித்துள்ளார்.